செய்தி விவரங்கள்

தலைமறைவாக உள்ள எம்எல்ஏவை போலீசார் தேடி வருகிறார்கள்!

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட வழக்கில் தலைமறைவாக உள்ள எம்எல்ஏவை போலீசார் தேடி வருகிறார்கள்.

கர்நாடகாவில் ஆட்சியை கலைப்பதற்காக, காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதையடுத்து கடந்த 18ம் தேதி பெங்களூர் அடுத்து, ராம்நகர் மாவட்டத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

அப்போது பெல்லாரி மாவட்டம் விஜயநகரா தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ ஆனந்த் சிங் மீது காம்ப்ளி தொகுதி எம்எல்ஏவான ஜே.என்.கணேஷ் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஜனவரி 19ம் தேதி இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், இதனால் ஆனந்தசிங் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஆனந்சிங், பெங்களூர் சேஷாத்ரிபுரம் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் ராம்நகர், காவல்துறையில் அளித்த புகாரில், கணேஷ் தன் மீது தாக்குதல் நடத்தியதோடு, பாதுகாவலர் வசம் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து தன்னை சுட்டுக் கொல்ல முயன்றதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து கணேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ், கணேஷை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ், மூத்த தலைவரான பரமேஸ்வர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கண்ணில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து, நாராயண நேத்ராலயா மருத்துவமனைக்கு ஆனந்தசிங் மாற்றப்பட்டுள்ளார். ஆனந்த்சிங் கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இன்னமும் கூட கணேஷ் தலைமறைவாக உள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. தங்களது ஆட்சியில் தங்களது கட்சி எம்எல்ஏவையே இன்னும் கைது செய்யமுடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்